பல்வேறு சமுதாய உட்பிரிவுகளை இணைத்து பரதவர் என்கிற பெயரில் அழைக்க சட்டமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என அமைச்சர் கீதாஜீவனிடம் பாண்டியபதி தேர்மாறன் மீட்புக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தாெடர்பாக பாண்டியபதி தேர்மாறன் மீட்புக்குழு அமைப்பாளர் அந்தோணிசாமி அமைச்சர் கீதாஜீவனுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “குமரி முதல் இராமேஸ்வரம் வரையிலான முத்துக்குளித்துறை பகுதியினை ஆட்சி புரிந்த மன்னர் தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன் என்கின்ற 16 ஆம் பாண்டியபதி தேர்மாறன் ஆவார். இவர் ஆங்கிலேய அரசினை எதிர்த்து, கடைசி வரை தீரத்துடன் போரிட்டு, இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்களுக்கு, தனது கப்பல்கள் மூலம் ஆயுதங்கள் சென்றடைய உதவியவர் ஆவார்.
இவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, தூத்துக்குடி தெலசால் அருள் சகோதர்களின் பங்களா வளாகத்தில் உள்ளது. பாண்டியபதி தேர்மாறன் அவர்களை மத்திய அரசு, தற்பொழுது இந்திய சுதந்திர போராட்ட வீரராக அங்கீகரித்து புகழ் சேர்த்துள்ளது. தமிழக சட்டமன்ற கூட்ட தொடர் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், கீழ்காணும் கோரிக்கைகைகளை, தங்களின் பரிந்துரையின் பேரில் இந்த கூட்ட தொடரில் சட்டமன்றத்தில் பேசி நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசு, இந்திய சுதந்திர போராட்ட வீரர்,மன்னர் தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன் என்கின்ற 16 ஆம் பாண்டியபதி தேர்மாறன் அவர்களின் கல்லறை இருக்கும் இடத்தில் அரசு செலவில் மணிமண்டபம் எழுப்ப வேண்டும் என்றும் அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுகிறோம். பரதவர் பழங்குடி பாரம்பரிய மீனவ மக்களாகிய நாங்கள் தமிழகம் முழுவதும் பரவி, 1.20 கோடி மக்களாக வாழ்ந்து வருகின்றோம்.
பட்டினவர் (சின்ன பட்டினவர், பெரிய பட்டினவர், அச்சு வெள்ளாளர், பட்டப்பு, கரைதுறை வேளாளர், செட்டியார், வர்ணாகுல முதலி மற்றும் கரையர்) 2. பருவத ராஜகுலம். 3. அரையர், அரையன், நுளையர். 4. பரவர். 5. பரதர் 6. முக்குவர் 7. அளவர் 8. சவளக்காரர் 9. செம்படவர், நாட்டார், பரம்பர் 10. கடையர் (பட்டம் கட்டியர் ) 11. ஓடக்காரர் 12. குகவேளாளர் 13. உமணர் 14. பெஸ்த்தா, சிவியர் என பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன.
பாரம்பரிய மீனவர்களாகிய நாங்கள், எங்களின் அனைத்து உட்பிரிவுகளின் பெயர்களையும் ஒன்றிணைத்து, பரதவர் என்கின்ற பண்டைய பெயரை, அழைப்பு பெயராக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.