செம்மொழி அந்தஸ்து பெற்ற உயிரினும் மேலான தமிழ் மொழியை காத்திட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்றது. இந்த விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் திமுக மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன் ஆகியோர் கலந்துக்கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது, “ எதிர்கால மாணவர்கள், இளைஞர்கள் தத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும். தமிழகம் கொள்கை அடித்தளத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. இருமொழி கொள்கையை பின்பற்றினாலும், உலகமெங்கும் உயர் பொறுப்புகளில் தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் தமிழ் மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்.
நமக்கென்று ஒரு தமிழ்த்தாய் வாழ்த்துள்ளது. உலக மொழிகளில் 6வது மொழியாக, தமிழை செம்மொழியாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தமிழ்நாடு அனைவராலும் வாழ்த்தப்படுகிறது, உலக அளவில் பறைசாற்றப்படுகிறது. எனவே, இதனை முறியடிக்க வேண்டும், நமது பெருமை பேசப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசு தொடர்ந்து இடையூறுகளை அளித்து வருகிறது.
பேரிடர் பாதிப்பு மற்றும் கல்விக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது. நமது சுதந்திரத்தை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழியை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் உள்ள சரத்து படி இந்தி, ஆங்கிலம், வேண்டுமானால் தமிழ் கற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியும், ஆங்கிலமும் வந்ததால், ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜஸ்தானி மொழியை யாரும் பேசுவதில்லை, மராட்டிய மாநிலத்தில் மராட்டியை யாரும் பேசுவதில்லை. அந்த மாநிலத்தின் தாய் மொழி அழிந்துவிட்டது. நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்த, செம்மொழி அந்தஸ்து பெற்ற உயிரினும் மேலான தமிழ் மொழியை காத்திட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என இவ்வாறு அவர் தெரிவித்தார்.