துாத்துக்குடி:துாத்துக்குடி சிவன் கோவிலில் நேற்று முன்தினம் நடந்த மகா சிவராத்திரி பூஜையில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
துாத்துக்குடி, பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவிலில் நடந்த மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விவசாயம் செழிக்க வேண்டி ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, கொய்யா, திராட்சை உள்ளிட்ட அனைத்து வகையான 1,008 பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது.
இரவு, 10:30 மணியளவில் நடந்த சிறப்பு பூஜையில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி முன் வெகுநேரம் பயபக்தியுடன் நின்று வழிபட்டார். அவருடன் கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, தி.மு.க., மாநகர செயலர் ஆனந்தசேகரன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அமைச்சர் கீதா ஜீவன் சிவன் கோவில் பூஜைகளில் கலந்து கொள்வது வழக்கம் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.