தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
1.தமிழ்நாட்டில் பள்ளிகளில் செயல்படும் 43,131 சத்துணவு மையங்களில் பயன்பெறும் 42.71 இலட்சம் மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டு மானியத் தொகை ஆண்டொன்றுக்கு 61.61 கோடி ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும்.
2.தமிழ்நாட்டில் செயல்படும் சத்துணவு மையங்களில் 25 பயனாளிகளுக்கு அதிகமாக பயன்பெறும் 25,440 சத்துணவு மையங்களுக்கு 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரிவாயு அடுப்புகள் புதியதாக வழங்கப்படும்.
3.திருநங்கைகளுக்கான ‘’அரண்” எனும் பெயரில் இரண்டு தங்கும் இல்லங்கள், சென்னை மற்றும் மதுரையில் 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
4.வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, 2000 மகளிருக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மொத்தம் 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
5.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் வகையில் 20 கருத்தரங்கங்கள் மொத்தம் 1 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.
6.புகழ்பெற்ற, தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 1 கோடி ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.
7.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் வகையில் விழிப்புணர்வு புத்தகங்கள் மற்றும் குறும்படங்கள் 1 கோடி ரூபாய் செலவில் தயாரித்து வெளியிடப்படும்.
8.வளர்ச்சி குறைபாடுள்ள (Developmental Delays) குழந்தைகளை கண்காணிக்கவும், முன்பருவக் கல்வி மற்றும் கற்றல் திறனை வளர்க்கவும் செயலிகளை உருவாக்கி, அதனை பயன்படுத்தும் பயிற்சிகள் அனைத்து அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் செலவினத்தில் வழங்கப்படும்.
9.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் குறித்தான குறைதீர்ப்பு மற்றும் சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு ஏதுவாக 1.50 கோடி ரூபாய் செலவில் கட்டணமில்லா தொலைபேசி மற்றும் IVRS தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்படும்.
10. பச்சிளம் குழந்தைகளின் உடல் நலனை காக்கவும், குறிப்பாக தவறான பாலூட்டும் முறைகளால் ஏற்படும் பச்சிளம் குழந்தைகளின் மரணங்களைத் தவிர்க்கவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
11.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் வரும் அனைத்து அலுவலகங்களையும் முழுமையான மின்னணு (Digital) அமைப்பாக மாற்றும் விதமாக 9.18 கோடி ரூபாய் மதிப்பில் கணினி மற்றும் அதன் தொடர்புடைய உபகரணங்கள் வழங்கப்படும்.
12.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டாரத்திலும், தருமபுரி மாவட்டத்தில் ஏரியூர் மற்றும் கடத்தூர் வட்டாரங்களிலும் என மொத்தம் மூன்று புதிய குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்கள் 1.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தோற்றுவிக்கப்படும்.
13.மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய மாவட்ட திட்ட அலுவலகம் 46.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தோற்றுவிக்கப்படும்.
14.சென்னை மாவட்ட திட்ட அலுவலகம், வட சென்னை, தென் சென்னை என இரண்டு மாவட்ட திட்ட அலுவலகங்களாக 59 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரிக்கப்படும்.
15.ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE), வளர்ச்சி குறைபாடுகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் அதனை கண்காணிக்கும் முறைகள் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் துறையின் அனைத்து களப்பணியாளர்களுக்கும் 2.02 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
16.குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்ற வழக்குகளில் ஏற்படும் இடர்பாடுகளை களையவும், நிறுவனப் பராமரிப்பில் உள்ள மற்றும் நிறுவனப் பராமரிப்பில் இருந்து வீடேகும் குழந்தைகளைக் கண்காணிக்கவும் ஒரு மேலாண்மை அலகு 150.00 இலட்சம் ரூபாய் செலவினத்தில் உருவாக்கப்படும்
17.பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து, பள்ளி மாணவர்களிடையே நேர்மறையான சூழலை உருவாக்கவும், இளம்பருவத்தினரிடம் உள்ள போதை பழக்கத்தில் இருந்து அவர்களை மீண்டுவரச் செய்யவும், சென்னையில் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் ‘உரிமை முற்றம்’ செயல்படுத்தப்படும்.
18, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் குழந்தைகளின் நலனை பேணிக் காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு ‘முன்மாதிரியான சேவை விருதுகள்’ 4.00 இலட்சம் ரூபாய் செலவினத்தில் வழங்கப்படும்
19.சென்னை, காஞ்சிபுரம், தருமபுரி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இயங்கும் சிறப்பு நீதிமன்றங்களில் குழந்தை நேய சூழல், 50.00 இலட்சம் ரூபாய் செலவினத்தில் உருவாக்கப்படும்.
20.புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் நன்னடத்தை அலுவலர் பணியிடங்கள் 42.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தோற்றுவிக்கப்படும்.
21.அரசு கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றில் உள்ள குழந்தைகளின் உளவியல் ரீதியான பிரச்சனைகளை கையாள்வதற்கு தொகுப்பூதியத்தில் சமூகப்பணியாளர் உடன் இணைந்த ஆற்றுப்படுத்துநர் பணியாளர்கள் 10 பேர் ஆண்டுக்கு 24.00 இலட்சம் ரூபாய் செலவினத்தில் ஈடுபடுத்தப்படுவர்.
22.திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கடலூர், சேலம் மற்றும் கோயம்புத்தூரில் செயல்படும் அரசு கூர்நோக்கு இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு அடிப்படைப் பயிற்சி (Basic Training Module) 162.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.